35 இடங்களை குறிவைத்த ED! ஜாபர்-அமீருக்கு அடுத்தடுத்து டார்கெட்! ரம்ஜானுக்குப் பின் சிக்கல்...

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, இயக்குநர் அமீரின் இடங்கள் உள்பட, சென்னையில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.. NCB-ஐ தொடர்ந்து ED-யும் அமீரை துரத்தும் நிலையில், சோதனைக்கான காரணம் தொடர்பாக பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன...

Apr 9, 2024 - 12:27
35 இடங்களை குறிவைத்த ED! ஜாபர்-அமீருக்கு அடுத்தடுத்து டார்கெட்! ரம்ஜானுக்குப் பின் சிக்கல்...

வெற்றிமாறன் கதை - யுவன்சங்கர் ராஜா இசை - அமீர் இயக்கம் என இறைவன் மிகப்பெரியவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, அதன் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தொடர்பாக அப்போது யாருக்கும் தெரியாது..

சர்வதேச அளவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்தியதாக, திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக்கை மார்ச் 9ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். கடத்தலில் வந்த பணம் மூலமாகவே, இறைவன் மிகப்பெரியவன் படத்தை ஜாஃபர் சாதிக் தயாரித்ததாக தெரிய வந்ததை அடுத்து, படத்தின் இயக்குநரும் அவரது நெருங்கிய நண்பருமான அமீரிடம், டெல்லியில் வைத்து கடந்த 2ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாஃபர் சாதிக்கின் வீடு, அலுவலகம் மற்றும் தியாகராயநகரில் உள்ள அமீரின் வீடு அலுவலகம் உள்பட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. 

முன்னதாக, டெல்லியின் கைலாஷ் பார்க்கில் இருந்த குடோனில், NCB நடத்திய சோதனையில், 50 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அதேபோன்ற குடோன் சென்னை தரமணியில் உள்ளதாக வெளியான தகவல் தொடர்பாகவே ED சோதனையும், விசாரணையும் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான இடங்களில், ஏற்றுமதி - இறக்குமதி குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அதோடு, அமீர்-ஜாஃபர் சாதிக் சேர்ந்தும், தனித்தனியாகவும், வெளிநாடுகளுக்குச் சென்ற தகவல்களை அமலாக்கத்துறை சேகரித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் ரெய்டு நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரம்ஜான் பண்டிகைக்குப் பின் அமீர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இவ்விவகாரத்தில் அமலாக்கத்துறை நேரடியாக களமிறங்கி, ரெய்டுகளை நடத்துவதால், திமுக கலக்கம் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow