நாடு முழுவதும் ராமநவமி கோலாகலம்.. அயோத்தியில் பால ராமருக்கு சிறப்பு அபிஷேகம்..

ராமநவமியையொட்டி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Apr 17, 2024 - 11:16
Apr 17, 2024 - 11:24
நாடு முழுவதும் ராமநவமி கோலாகலம்.. அயோத்தியில் பால ராமருக்கு சிறப்பு அபிஷேகம்..

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஸ்ரீ ராமர் ஏழாவது அவதாரமாகும்.  ஆண்டு தோறும் ராம பிரான் அவதரித்த தினம் ராம நவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அவர் அவதரித்ததாக கருதப்படும் அயோத்தில் ஆண்டு தோறும் ராமநவமி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அயோத்தி மட்டுமின்றி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள விஷ்ணு ஆலயங்களில் ராம நவமி கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு அயோத்தியில் ராம நவமியை பிரமாண்டமாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் வந்துள்ள முதல் ராமநவமி இதுவாகும். இதையொட்டி அயோத்தியில் காலை முதல் பால ராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால ராமரை தரிசித்து வருகின்றனர். ராம நவமியையொட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 1,11,111 கிலோ லட்டுவை நைவேத்தியமாக படைத்து பிறகு அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் ராம நவமியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப்பதிவில், "ராமநவமி கொண்டாட்டத்தில் ஈடு, இணையற்ற மகிழ்ச்சியில் இன்று அயோத்தி நகரம் நிறைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு பின்னர், அயோத்தியில் இந்த வகையில் ராமநவமியை கொண்டாடும் சிறப்புரிமையை நாம் பெற்றுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow