சச்சினின் முதல் இரட்டை சதம்....கிறிஸ் கெயிலின் அதிவேக இரட்டை சதம்..! மறக்குமா நெஞ்சம்?

பிப்ரவரி 24 கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகி, ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் நினைவுகூறப்படும் நாளாக ஆகியுள்ளது.

Feb 24, 2024 - 13:09
சச்சினின் முதல் இரட்டை சதம்....கிறிஸ் கெயிலின் அதிவேக இரட்டை சதம்..! மறக்குமா நெஞ்சம்?

2010-ல் சரியாக இதே நாளில், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார் ’மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர்.  குவாலியரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 401 ரன்களை குவித்தது. 

’லிட்டில் மாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர், 147 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டி, கிரிக்கெட் உலகத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 45-வது ஓவரில் 191 ரன்களைத் தொட்டுவிட்டாலும், கடைசி 5 ஓவர்களில் சச்சினுக்கு 9 பந்துகள் மட்டுமே கிடைத்தது. ஆனாலும், கிரிக்கெட் கடவுள் 200 மைல்கல்லை எட்டுவதை எதிரணியால் மட்டுமல்ல விதியினாலும் தடுக்க முடியவில்லை.

200 ரன்களை எடுப்பதற்கு அவசரப்படாமல், அதிரடி மன்னன் தோனியின் அதிரடியை எதிர்முனையில் இருந்து சச்சின் ரசித்த விதம், ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. 25 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசிய சச்சின், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் குவித்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆட்டத்தில் டேல் ஸ்டெய்னை, அவர் எதிர்கொண்ட விதம் கிரிக்கெட் வரலாற்றில் காலத்துக்கும் பேசப்படும்.

2015 உலகக் கோப்பையில் இதே நாளில், ’யுனிவர்சல் பாஸ்’ கெயில் ஒருநாள் கிரிக்கெட்டின் அதிவேக இரட்டை சதத்தை விளாசினார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில், முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்கள் முடிவில் 372 ரன்கள் குவித்தது. 105 பந்துகளில் சதமடித்த கெயில், அடுத்த 50 ரன்களை 21 பந்துகளிலும், அடுத்த 50 ரன்களை 12 பந்துகளிலும் எடுத்து, எதிரணி பந்துவீச்சை கான்பெரா மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளால் பிப்ரவரி 24 கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகி, ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் நினைவுகூறப்படும் நாளாக ஆகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow