வாட்ஸ்ஆப்பில் எச்சரித்த இயக்குநர் கௌதமன்..! - அமைச்சர் சேகர்பாபு கொடுத்த பதில்..!
வடலூர் வள்ளலார் இடத்தில் அரசு அத்துமீறினால் மிகக் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இயக்குநர் கௌதமன் வாட்ஸ் ஆப் மூலம் எச்சரித்த நிலையில் விளைவுகளை சந்திக்க அரசு தயார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான சபை, தருமசாலை, அருட்பெருஞ்சோதி மண்டபம் தவிர்த்து, மீதமிருக்கும் திறந்த வெளியே `பெருவெளி’ என்று அழைக்கப் படுகிறது. இந்த பகுதியில் ஆய்வுகள், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வள்ளலார் சர்வதேச மையத்திற்கான பணி தொடங்கியதும், பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன.
இந்த நிலையில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்காக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த 18ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து வள்ளலார் மையம் அடிக்கல் நாட்டப்படுவதற்கு பாமக, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து தனி தனியாக போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கௌதமன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் சவாலை ஏற்கிறோம். அறத்தை போதித்த ஐயா வள்ளலார் அவர்களின் இடத்தை ஆக்கிரமித்து அரசு கட்டவிருக்கும் சர்வதேச மையத்தை திருஞான சபைக்கு என்று ஒதுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட 46 ஏக்கரில் கட்டுங்கள், அல்லது அரசு புறம்போக்கு இடத்தில் கட்டுங்கள் திருஞான சபையை மறைக்கும் விதத்தில் கட்டினால் கடுமையாக எதிர்ப்போம் என்று சொன்னதை நேர்மையோடு உள்வாங்காமல் அரசும் அமைச்சரும் அத்துமீறினால் மீண்டும் சொல்கிறோம் ஒரு போதும் தமிழினம் அதனை முறியடிக்காமல் விடாது.
நான் பிறந்த கடலூர் மாவட்ட மக்களும் உலகம் முழுவதும் வாழும் மானமுள்ள தமிழர் கூட்டமும் ஒருபோதும் அதனை ஏற்காது என்பதை உரிமையுடனும் எச்சரிக்கையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் சேகர்பாபு மீது மரியாதை வைத்தும் ஏற்கனவே அவருடன் இருக்கின்ற நட்பு முறையிலும் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பிய காணொளியைப் பார்த்த பின்பு அவர் திருப்பி எனக்கு அனுப்பிய பதிலை உயிராக நேசிக்கும் தமிழ் மக்களுக்கு தெரிவிப்பதை எனது கடமை என்று கௌதமன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இருந்தால் அது முதலமைச்சர் அவர்களையே மொத்தமாக வந்து சேரும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக கௌதமன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?