கபட நாடகம் புனைவதில் திமுகவினருக்கு பிஎச்டி பட்டம் - இபிஎஸ் கடும் தாக்கு

உண்மைகளை மறைத்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு முதுகெலும்பில்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

Nov 12, 2024 - 12:32
Nov 12, 2024 - 13:54
கபட நாடகம் புனைவதில் திமுகவினருக்கு பிஎச்டி பட்டம் - இபிஎஸ் கடும் தாக்கு

கபட வேடம் புனைவதில் பிஎச்டி பட்டம் பெற்ற திமுகவினர் அதிமுக மீது பாய்வது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,   “கடந்த 42 மாதகால நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பதுபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

 “தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால்தான் அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வரும் என்றால், 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்க நாங்கள் தயார்” என்று அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வந்திருந்தன.

 இதுகுறித்து, 10.11.2024 அன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பியபோது, 42 மாதகால திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியம், போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற வாரியப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன என்று பதில் அளித்தேன். என்னுடைய இந்த கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது. 

 “மொட்டைத் தாத்தன் குட்டையில் வீழ்ந்தது” போல் மனம் போன போக்கில் உண்மைகளை மறைத்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு முதுகெலும்பில்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். கபட நாடகம் ஆடுவதில் Ph.D., பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஒலமிடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. 2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, இன்றைக்கு அவர்களுக்கு பட்டை நாமம் போட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களின் ஆற்றாமையை அரசு ஊழியர்கள்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த திமுக-விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. இனியும் உண்மை நிலைகளை உணராமல், இதய சுத்தியோடு செயல்படும் எங்கள் மீது “வெந்ததைத் தின்று வாய்க்கு வந்தபடி உளறித் திரிபவர்களைப்போல்" பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவார்கள்" என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow