கோவையில் கிரிக்கெட் மைதானமா? ஸ்டாலின் போட்ட பந்து... தூக்கி அடிச்ச அண்ணாமலை...

சட்டமன்ற தேர்தலுக்கு கொடுத்த 511 வாக்குறுதிகளை முதலில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணாமலை அறிவுரை கூறியிருக்கிறார்.

Apr 7, 2024 - 18:37
Apr 7, 2024 - 18:43
கோவையில் கிரிக்கெட் மைதானமா? ஸ்டாலின் போட்ட பந்து... தூக்கி அடிச்ச அண்ணாமலை...

தமிழக தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தனது எக்ஸ் பக்கத்தில், கோவை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் போது, பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுள்ள ஏராளமான இளைஞர்களை சந்தித்தோம். அப்போது, பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர். 


வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் மேற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஊக்கம் தேவை. இதற்காக கோவை மாவட்டத்தில் நவீனமயமான உலகத்தரம் வாய்ந்த புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பதிவிட்டிருந்தார். 

இதனை ரீடுவீட் செய்து பதிலளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  கோவையில் அதிநவீன கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சி எடுப்போம் என்ற அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விடுத்த கோரிக்கையை, விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதியை சேர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். 


மேலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு பிறகு, தமிழ்நாட்டின் 2வது சர்வதேச தரமான மைதானமாக இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் தமிழக அரசும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உறுதி பூண்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.     

இதனை ரிடுவீட் செய்துள்ள கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2021ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது கொடுத்த 511 வாக்குறுதிகளே இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். 


தோல்வியை உணர்ந்த பின், புதிய வாக்குறுதிகளை கொடுப்பதற்கு முன்பு, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை முதலில் செயல்படுத்த வேண்டும். திமுக தனது தேர்தல் ஜாலங்கள் மூலம் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு வீரர்களையும் ஏமாற்றிவிட முடியாது. 


ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் கோவையில் ஒரு பேருந்து நிலையத்தை கூட அமைக்க முடியாத திமுக, கிரிக்கெட் மைதானம் அமைப்பதாக கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாக கருதப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும், இது, கோவை மக்களின் மெதுவான கைத்தட்டலுக்கு தகுதியான நகைச்சுவையாகும் என்றும் விமர்சித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow