தமாகா வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு.. தூத்துக்குடிக்கு மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்!
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சிகள் கூட்டணி அமைத்து தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸின் I.N.D.I.A கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த அறிவிப்பு நேற்று (மார்ச் 21) வெளியானது. அதில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி மற்றும் ஈரோடு ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடவுள்ள தமாகா வேட்பாளரை ஜி.கே.வாசன் அறிவித்தார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரோடு தொகுதியில் பி.விஜயகுமார் என்பவர் போட்டியிட உள்ளதாகவும், ஸ்ரீபெரும்புதூரில் வேணுகோபால் என்பவர் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய தகவலை மட்டும், நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, நாளை மறுதினம் அறிவிப்பதாக தெரிவித்தார்.
What's Your Reaction?