திராவிட மாடல் அல்ல, திண்டாட்ட மாடல்!-ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

இது திராவிடம் மாடல் மாதிரி தெரியவில்லை. மக்களை திண்டாட வைக்கும் மாடலாகவே தெரிகிறது

Dec 26, 2023 - 12:14
Dec 26, 2023 - 14:53
திராவிட மாடல் அல்ல, திண்டாட்ட மாடல்!-ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசியல் கட்சித் தலைவர்கள் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.இந்த நிலையில் தெலங்கானா கவர்னரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி வந்தார். 

தூத்துக்குடியில் உள்ள முருகேசன் நகர் மற்றும் பொட்டல்காடு ஆகிய பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.  பொதுமக்கள் வழங்கிய புகார் மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,"வரலாறு காணாத அளவுக்கு பெய்த கன மழைக்கு தூத்துக்குடி மாவட்டமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் நிவாரண பொருட்கள் மக்களுக்கு சென்றடைந்து உள்ளன. ஆனாலும் குழந்தைகளுக்கு கொடுக்க பல்வேறு இடங்களில் பால் பவுடர் இல்லாத நிலை உள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்கு உடனடியாக பால்பவுடர் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும் பல உதவிகள் மக்களுக்கு தேவையாக உள்ளது. பொதுவாக நிவாரண உதவிகள் கொடுத்துவிட்டு போவதால் யாருக்கும் பயன் இல்லை. யார், யாருக்கு என்ன வேண்டும் என்று அதிகாரிகள், பார்க்க வேண்டும். நிவாரணம் கொடுப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.இன்னும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நான் ஒரு மருத்துவர் என்கிற முறையில் கூறுகிறேன். மழைக்காலங்களில் நோய்கள் வந்துவிடக்கூடாது. ஆகவே அரசு சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை கொடுத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசிடம் 21 ஆயிரம் கோடி, 6,000 கோடி வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு 6,500 கோடி வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால்,  இந்திய அரசிடம் நிதி கேட்கும் அளவுக்கு இவர்கள் என்ன பணி செய்திருக்கிறார்கள்.மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தென் மாவட்ட மக்களை தமிழக  அரசாங்கம் வஞ்சிக்கிறது. இது மன்னிக்கவே முடியாத குற்றம். இந்த விஷயத்தில் தமிழக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்து இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் புயல் வந்தபோது அந்த அரசு 10 லட்சம் பேரை அப்புறப்படுத்தியது. தூத்துக்குடியில் குளங்கள் வாய்க்கால்களை தூர்வார  15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்தப் பணி ஒழுங்காக நடந்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமா?

இதுபோல கனமழை பெய்யும் போது ஆறுகளில் ஓடிவரும் தண்ணீரை சேமிக்க நீண்ட கால திட்டம் அவசியம். பாபநாசம் அணையில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. காட்டார்களில் இருந்து அதற்கும் அதிகமாக தண்ணீர் வந்துள்ளது. அந்த தண்ணீரை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதற்கெடுத்தாலும் திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது இது திராவிடம் மாடல் மாதிரி தெரியவில்லை. மக்களை திண்டாட வைக்கும் மாடலாகவே தெரிகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow