சொந்த கட்சியினர் விலைபோனார்களா..? எம்ஜிஆர் மாளிகையில் குமுறிய எடப்பாடி பழனிச்சாமி.. சாட்டையை சுழற்றுவாரா?

மக்களவைத் தேர்தலில், அதிமுக நிர்வாகிகள் பலரும் பணிகளை சரிவர செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால், கூட்டணிக் கட்சியினர் போட்டியிட்ட சில தொகுதிகளில் சரிவர ஒத்துழைப்பு கொடுக்காமல் சைலண்ட் மோடில் இருந்த நிர்வாகிகளை களையெடுக்கப் போகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

Apr 24, 2024 - 13:33
சொந்த கட்சியினர் விலைபோனார்களா..? எம்ஜிஆர் மாளிகையில் குமுறிய எடப்பாடி பழனிச்சாமி.. சாட்டையை சுழற்றுவாரா?

தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நான்கு முனை போட்டி நிலவியதால், அரசியல் களத்தில் அனல் பறந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அந்த கட்சிக்கு திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கடைசி நேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானாலும், விறுவிறுப்பாக வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்திற்கு கிளம்பினார் பிரேமலதா. அதிமுக வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்த அவர், இது ராசியான கூட்டணி என்றும் பெருமையுடன் கூறினார்.

மறுபுறம், அனைத்து தொகுதியிலும் அனல் பறக்கும் பிரசாரம் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. தேமுதிக வேட்பாளர்களுக்கும் அதிமுக நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர். தேர்தல் முடிந்த பின்னர், பல தொகுதிகளில் பதிவான வாக்குகள் அரசியல் கட்சியினரை, அதிலும் குறிப்பாக, அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில்தான், நேற்றைய தினம்(23.04.24) ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், சென்னை  மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மத்திய சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்தது ஏன் என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருந்துள்ளது. திமுக வேட்பாளராக மத்திய சென்னையில் சிட்டிங் எம்.பி தயாநிதி மாறன் போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி களம் கண்டார். இந்நிலையில், அங்கு, கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்காளர்களை அதிமுக வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் சரியாக சந்திக்கவில்லை என புகார் சென்றுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவர், தன் கீழ் உள்ள பகுதி செயலாளர்களையும், வட்ட செயலாளர்களையும், தேர்தல் பணிகளில் முறையாக பயன்படுத்தாமல், பொறுப்பில் இல்லாத சிலரை வைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டதாகவும், இது குறித்து தேர்தல் பொறுப்பாளர்களை சந்தித்து புகார் அளித்தும் பயனில்லை என்று புலம்பியுள்ளனர் அதிமுகவினர். திமுகவினரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படாமல் இருந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. 

வாக்காளர்களை நேரில் சந்தித்திருந்தால், ஆர்வத்துடன் பலரும் வாக்களிக்க வந்திருப்பார்கள் என்றும், ஆனால், பொறுப்பாளர்களோ, தலைமை கொடுத்த பணத்தை சைலண்டாக பதுக்கி விட்டனர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

இதன் காரணமாக, மத்திய சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்தாலும், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் முரசு, 3-வது இடத்தை பெறுவதற்கே மைக் உடன் கடுமையாக மோதி வருவதாக கள நிலவரம் சொல்கிறது.

அதே நேரத்தில், மத்திய  சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வினோஜ் பி. செல்வம் 2வது இடத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் வேலை செய்யாமல், உள்ளடி வேலை செய்த கட்சி நிர்வாகிகளை களையெடுக்கப்போவதாக எச்சரித்துள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.

இது ஒருபுறம் இருக்க, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாரனுக்கு ஆதரவாக அனுதாப அலை வீசினாலும், திருமங்கலம் தொகுதியில் உள்ள அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் பலரும், எதிர்கட்சி வேட்பாளர்களிடம் கை நீட்டிவிட்டு, களத்திற்கு செல்லாமல்  சைலண்ட் ஆகி விட்டதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. 

அதேபோல, கரூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேமுதிகவினர் பிரசாரம் செய்தனர். ஆனால், பணப்பட்டுவாடா பிரச்னையில், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுக, கூட்டணிக்கு அழைத்து, 5 தொகுதிகள் கொடுத்தாலும், அதற்கேற்ப சரிவர மரியாதையோ, ஒத்துழைப்போ இல்லை என்பதுதான் தேமுதிக நிர்வாகிகளின் புகாராக உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அதிமுக எஃகுக் கோட்டையாக இருந்தது. கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும், வெற்றிக்காக களத்தில் இறங்கி அதிமுக நிர்வாகிகள் வேலை செய்வார்கள். எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக உள்ள இந்த நேரத்தில், நிர்வாகிகள் பலரும் எதிர் அணியினரிடம் விலை போனதோடு, கூட்டணி வேட்பாளர்களுக்கே குழிபறித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி சாட்டையை சுழற்றினால் மட்டுமே, கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும். 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இப்போதிலிருந்தே களப்பணியில் இறங்கினால் மட்டுமே, ஆட்சியை கைப்பற்ற முடியும் என்கின்றனர் அதிமுகவின் தீவிர விசுவாசிகள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow