தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது.. அனுமதி இல்லாமல் பாஜக விளம்பரம்.. விளக்கம் கேட்கும் சத்யபிரதா சாகு
தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1284.46 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஊடக கண்காணிப்பு குழுவின் அனுமதி எண் இல்லாமல் பாஜக கட்சி விளம்பரம் வெளியிட்டது தொடர்பாக அந்தக் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும், இதையடுத்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, " நேற்று வரை (15-04-2024) 85 வயதுக்கு மேற்பட்ட 66,461 நபர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். நாளை (17-04-2024) மாலை 6 மணிக்கு பின்னர் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரும் எந்த வகையிலான பிரசாரங்களையும் மேற்கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1284.46 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.78.84 கோடி பறக்கும் படையினராலும், ரூ.83.63 கோடி வருமான வரித்துறையினராலும் பறிமுதல் செய்யப்பட்டது.
1,425 கிலோ தங்கக்கட்டிகள் உள்ளிட்ட ரூ.1,079 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பூந்தமல்லி அருகே பிடிக்கப்பட்ட தங்கம் அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 1,425 கிலோ தங்கம் தொடர்பாக வருமான வரித்துறையிடம் இருந்து முழுமையான அறிக்கை பெறப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகளும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் நடத்திய சோதனை மூலம் ரூ.1.03 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற எண்ணை குறிப்பிடாமல் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டால், அந்த கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்" என தெரிவித்தார்.
இன்று நாளிதழ்களில் ஊடக கண்காணிப்பு குழுவின் அனுமதி எண் இல்லாமல் பாஜக கட்சி விளம்பரம் வெளியிட்டது தொடர்பாக அந்தக் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று கூறினார்.
What's Your Reaction?