சீர்காழி சட்டை நாதர் கோயிலில் பொக்கிஷமாக கிடைத்த தேவார செப்பேடுகள்.. சிறப்பு வழிபாடு செய்த சிவனடியார்கள்
சீர்காழியில் பழமையான செப்பேடுகள் கிடைத்த நந்தவனம் பகுதியில் திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என்ற இடத்தில் தேவாரப் பாடசாலை மாணவர்களால் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு, சிவாச்சாரியார்களால் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைய வாய்ந்த சட்டநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநிலைநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயமான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டிய திருத்தலமாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் அவதரித்தவர். "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் இந்த சீர்காழியில் தான் பாடினார்.
தேவாரப் பதிகம் பெற்ற தலங்களில் அதிகமான பதிகங்கள் பெற்ற தலம் என்ற பெருமை சீர்காழி தலத்திற்குண்டு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் பாதி காழி' என்பது பழமொழி , காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். காசியை தரிசித்த புண்ணியம் இங்கு கிடைக்கும். இதுவே எல்லாவற்றிற்கும் மூல க்ஷேத்திரம்.
பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். மூன்று தளங்களில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரி கோலத்திலும், அதற்குமேலுள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவபெருமான் ஒரே ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்.
பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி யாகசாலை மண்டபம் அமைப்பதற்காக கோயில் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது மண்ணில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர்,முருகர்,வள்ளி,தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும்,55 பீடங்கள்,பூஜை பொருட்கள் மற்றும் சீர்காழியில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் தாங்கிய தேவார செப்பேடு 462ம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
ஐம்பொன் சுவாமி சிலைகள் மற்றும் தேவாரப் அதிக செப்பேடுகள் கோயில் பள்ளியறை அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே இன்று தேவாரப் பதிகம் செப்பேடுகள் பொக்கிஷங்கள் கிடைத்த முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கோயில் நந்தவனம் பகுதி செப்பேடுகள் கிடைத்த இடத்தில் கோயில் கட்டளை ஸ்ரீமத் சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பாடசாலை மாணவர்கள் தேவாரப் பதிகங்கள் ஓதிட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து புனித நீர் அவ்விடத்தில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் தமிழ்ச்சங்கத் தலைவர் மார்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், முரளி,கோயில் கணக்கர் செந்தில், கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் பலர் பங்கேற்றனர்.
What's Your Reaction?