அதிமுகவில் "எப்படி இருந்த நான்?.. ஓ.பன்னீர் செல்வம் ஆதங்கம்.. ஏன் என்ன ஆச்சு?
ஒரு காலத்தில் தான் கையெழுத்திட்டால் தான் அதிமுக வேட்பாளர் பட்டியலே வெளியாகும். ஆனால் தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு வாக்காளர்கள் நீதி வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். கூட்டத்தில் பங்கேற்க வந்த அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டியிடுவது தனக்கு கூடுதல் விளம்பரத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் கேட்ட சின்னத்தையே மற்ற பன்னீர்செல்வம்களும் கேட்டார்கள். ஆனால் தனக்கு பலாப்பழச் சின்னம் கிடைத்தது இறைவன் கொடுத்த வரம்.
ஒரு காலத்தில் நான் கையெழுத்திட்டால் தான் அதிமுக வேட்பாளர் பட்டியலே வெளியாகும். ஆனால் தற்போது என்னுடைய இந்த நிலைமைக்கு வாக்காளர்கள் சரியான நீதி வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பேன்" என தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்த போது ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராக அறிவிக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு இரட்டை தலைமையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர். ஒற்றை தலைமைக்கு போர்க்கொடி உயர்த்தவே எடப்பாடி பழனிச்சாமியால் ஓ.பன்னீர் செல்வம் ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுகவை மீட்கப்போவதாக கூறி தனது ஆதரவாளர்களுடன் கிளம்பினார். லோக்சபா தேர்தல் வரவே தற்போது சுயேச்சையாக களமிறங்கியுள்ளார்.
சோதனையாக ஓ.பன்னீர் செல்வத்துற்கு எதிராக பல பன்னீர் செல்வங்கள் களமிறங்கியுள்ளனர். பலாப்பழம் சின்னம் கைகொடுத்தால் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?