எம்ஜிஆர், ஜெயலலிதா,விஜய் படம் : அலுவலகத்தில் பேனரை மாற்றிய செங்கோட்டையன்
ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் படம் இடம் பெற்றிருக்கும் பேனரை செங்கோட்டையன் வைத்து இருக்கிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். நேற்றைய தினம் விஜயை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் தன்னை இணைத்து கொண்டார்.
கட்சியில் இணைந்த அவருக்கு, தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்து கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி, கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கோபி செட்டி பாளையத்தில் அமைந்துள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து அதிமுக பேனர் நேற்று அகற்றப்பட்டு இருந்தது. இன்றைய தினம் காலை அங்கு புதிய பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக சென்னையில் தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களிடம் பேசியதாவது: மக்களின் ஆதரவுடன் 2026ல் ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வார். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ விஜய்க்கு உதவுவேன். அதிமுகவில் இருந்து மேலும் சிலர் வருவது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. சொன்னால் பிரச்சினை வரும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?

