வெள்ளத்தில் மிதக்கும் UAE.. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கனமழையால் 100-க்கும் மேற்பட்டோர் பலி..
ஐக்கிய அரபு எமிரேட்சில் வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் அங்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நேற்று (ஏப்ரல் 15) முதல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
குறிப்பாக துபாயில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருவதால் அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட இடங்களிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
மழை காரணமாக சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பல வாகனங்கள் சேதமடைந்து உள்ளன.
பலத்த காற்று காரணமாக துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மழையைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தொடர் கனமழையால் வேலைக்கு செல்வோர் வீட்டில் இருந்தபடி பணியாற்றும்படியும், பொதுமக்கள் தங்களது இல்லங்களில் பத்திரமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு முன்னர், இப்படி மழை பெய்தது பார்த்தது இல்லை என அந்நாட்டில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பஹ்ரைன், கத்தார், சௌதி அரேபியா ஆகிய நாடுகளிலும் மழை பெய்தது. ஓமனில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பள்ளி குழந்தைகள் 10 பேர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 3 நாட்களாக பாகிஸ்தானின் பஞ்சாப், கைபர் பக்துவா, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 மாகாணங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?