ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக வழக்கு-நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தகவல்

ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் நிதியில்லை என கூறும் அரசு, மக்களுக்கு நன்மை இல்லாத பொழுதுபோக்கான இந்த திட்டத்திற்கு 40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது

Nov 30, 2023 - 15:49
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக வழக்கு-நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தகவல்

சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை (டிச. 01)
விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கார் பந்தயத்துக்கு எதிராக மருத்துவர் ஸ்ரீஹரீஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், கார் பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் பெற்ற அனுமதி குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

இந்நிலையில் முன்னாள் அரசு வழக்கறிஞரும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான ஏ.வி.பாலுசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்திருப்பதாகவும்,அதை அவசர வழக்காக இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்,பாலுசாமியின் வழக்கை நாளை (டிச.01) விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாலுசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், தெரு பந்தயமாக நடத்துவதாக கூறும் அரசு, அதை நடத்தவதற்கு பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவோ? அல்லது இந்த பந்தயம் நடத்த வேண்டுமென பொதுமக்களிடம் விருப்பம் கோரவோ? இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு செலவில் இதுபோன்ற சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதம் எனவும், சாலையில் நடத்துவதால் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் உயிரிழப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.தீவுத்திடலை சுற்றி பந்தயம் நடத்துவதால் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அசவுகரியம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் நிதியில்லை என கூறும் அரசு, மக்களுக்கு நன்மை இல்லாத பொழுதுபோக்கான இந்த திட்டத்திற்கு 40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும், பந்தயம் நடத்துவதற்காக ஏற்கனவே செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள இருங்காட்டுக்கோட்டை வளாகத்தில் இந்த பந்தயத்தை நடத்தினால் தேவையற்ற செலவுகள் அரசுக்கு ஏற்படுவதை தடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு நாளை (டிச 01) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow