நாகை: கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை-டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம்

Nov 30, 2023 - 15:54
நாகை: கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை-டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம்

நாகை அருகே கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. சில கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக கேட்பதாகவும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடைகள் முன்பு மது பாட்டில் விலைப்பட்டியல் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

ஆனாலும் பல டாஸ்மாக் மதுக்கடைகளில் விலைப்பட்டியல் என்பதே வைக்கப்படாமல் ஊழியர்களால் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாகவே பெறுவதாக புகார்கள் தொடர்ந்தது. இதில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த சாட்டியக்குடி கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மதுக்கடையில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதா? என்று நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்திரராஜன் விசாரணை நடத்தினார். இதில் ஊழியர்கள் மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதியானது.

இதனையடுத்து டாஸ்மாக் மதுக்கடையின் மேற்பார்வையாளர்கள் காந்தி, மாதரசராயன், விற்பனையாளர்கள் அம்பேத்கர், சண்முகவடிவேலன், வேதையன் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டார்.ஆனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 பேரும் அதே கடையில் தொடர்ந்து பணிபுரிவதாகவும் ஒரு தகவல் உலா வந்தபடி உள்ளது.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow