எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை-சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம், தி.நகர் சத்தியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார்.
 
                                அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலிசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ல் வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்த ஒபிஎஸ் தரப்பபினர் அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், வாகனங்களின் பதிவு புத்தகங்கள், கணினி உள்ளிட்டவற்றை சூறையாடி சென்றதாக, இபிஎஸ் தரப்பில் அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, அன்றைய தினம் அதிமுக அலுவலகம் சென்ற தங்களை எடப்பாடி பழனிசாமி அறிவுரையின்பேரில் குண்டர்கள் தங்களை தாக்கியதாக ஒ.பி.எஸ். ஆதரவாளரான ஜே.சி.டி.பிராபகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில்,எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம், தி.நகர் சத்தியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார்.இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி ஜெ.சி.டி.பிராபகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,ஜெ.சி.டி.பிராபகர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            