தருமபுரி: தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து-போக்குவரத்து பாதிப்பு

சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Nov 29, 2023 - 11:38
தருமபுரி: தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து-போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் என்ற இடத்தில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி  நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து பெங்களூருக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்றுள்ளது. இந்த பேருதில் ஓட்டுநராக அப்துல் ஹமீதும், மாற்று ஓட்டுநராக அலி அக்பர் என இருவர் சென்றுள்ளனர். தொடர்ந்து பெங்களூரில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பி உள்ளனர்.
 
பெங்களூரிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சத்தம் வந்துள்ளது.

இதனால் பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்தி பார்த்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை அணைக்க முயற்சி செய்தபோது, திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. 

பேருந்து தீப்பிடித்ததை அறிந்த ஓட்டுநர்கள் பேருந்து விட்டு கீழே இறங்கி பதறியடித்து ஓடிள்ளனர்.இதனைக்கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை  அணைத்தனர். ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பேருந்து பாதிக்கு மேல் எரிந்துவிட்டது.

மேலும், வாகனம் முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்து எலும்பு கூடாக காட்சியளித்தது.  இதனால் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இந்த தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

-பொய்கை கோ.கிருஷ்ணா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow