சட்டவிரோத கட்டுமானம்.. எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை சரமாரி கேள்வி

Apr 3, 2024 - 17:39
சட்டவிரோத கட்டுமானம்.. எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை சரமாரி கேள்வி

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த மதியழகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் "திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டி வருகிறேன். இது சட்ட விரோத கட்டுமானம் என மாநகராட்சி சார்பில் எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் எனது கட்டுமானத்தை  வகைப்படுத்தி முறைப்படுத்த திருச்சி மாநகராட்சிக்கு மனு அனுப்பி உள்ளேன். எனவே மாநகராட்சி சார்பில் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சட்ட விரோத கட்டுமானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள், "உள்ளாட்சி அமைப்புகளில் சட்ட விரோத கட்டுமானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்டங்களில், அந்தக் குழு இதுவரை எத்தனை முறை கூடி விவாதித்துள்ளது? இதன்படி எத்தனை சட்ட விரோத கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர். 

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்டதா? அல்லது சட்டவிரோத கட்டுமானம் மேற்கொண்டவர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டதா? அரசாணை வெளியிட்ட பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" எனவும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நீதிபதிகள், "உள்ளாட்சி அமைப்புகளில் சட்ட விரோத கட்டுமானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து துறை சார்ந்த செயலாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தமிழக அரசு சட்ட விரோத கட்டுமானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow