+2 வேதியியல் தேர்வில் தவறான கேள்வி... கலங்கிய மாணவர்கள்.. கருணை மதிப்பெண் தர உத்தரவு

Apr 3, 2024 - 18:28
+2 வேதியியல் தேர்வில் தவறான கேள்வி... கலங்கிய மாணவர்கள்.. கருணை மதிப்பெண் தர உத்தரவு

12ம் வகுப்பு வேதியியல் தேர்வில் தவறாக இடம்பெற்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தவித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வில் மாநிலம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு  எழுதினர். 

தேர்வு முடிவுகள் மே மாதம் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 83 மையங்களில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 12-ம் வகுப்பு வேதியியல் தேர்வு வினாத்தாளில் 33-வது கேள்வி  தவறாக இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அந்தக் கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால், கேள்விக்குரிய 3 மதிப்பெண்களை முழுமையாக வழங்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், கேள்வி எண் 33-க்கு மாணவர்கள் தவறாகவே பதில் அளித்திருந்தாலும் 3 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் கிடைக்காமல் போய்விடுமோ என்று அச்சமடைந்திருந்த மாணவர்கள் இந்த அறிவிப்பால் நிம்மதியடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow