சாதித்துக் காட்டிய மதுரை ரயில் நிலையம்.. இத்தனை கோடி வருமானமா?...
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் அதிக வருமானம் ஈட்டிய ரயில் நிலையங்களில் மதுரை ரயில் நிலையம் ரூ.215 கோடியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்தில் மொத்தம் 132 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தந்து பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2023 - 2024 ஆம் நிதியாண்டில் மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் வருமானம் தொடர்பான பட்டியலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், மதுரை ரயில் நிலையம் ரூ.215 கோடி வருமானம் ஈட்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ரூ.130 கோடி வருமானம் ஈட்டி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அதேநேரம், சென்னைக்கு தினசரி ரயில் மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில் வசதி இல்லாத போதும் திருநெல்வேலி - தென்காசி வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள் முதல் 50 இடத்திற்குள் வந்து அசத்தியுள்ளன.
அதன்படி அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் ரூ.2.80 கோடியுடன் 26வது இடத்தை பிடித்துள்ளது. கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் ரூ.87 லட்சம் வருமானத்துடன் 44வது இடத்தையும், பாவூர்சத்திரம் ரயில் நிலையம் ரூ.85 லட்சம் வருமானத்துடன் 45வது இடத்தையும், சேரன்மகாதேவி ரயில் நிலையம் ரூ.66 லட்சம் வருமானத்துடன் 48வது இடத்தையும் பிடித்துள்ளன.
What's Your Reaction?