நியாய விலைக் கடை அமைக்காத அரசு... வயலில் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள்...

சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் நியாய விலைக் கடையை செயல்படுத்தவும் அதிகாரிகள் மறுப்பதாக மக்கள் வேதனை.

Mar 9, 2024 - 17:44
நியாய விலைக் கடை அமைக்காத அரசு... வயலில் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள்...

தஞ்சாவூர் அருகே பகுதிநேர நியாய விலைக் கடையை அமைக்க வலியுறுத்தி  கிராம மக்கள் வயலில் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த புளியக்குடி ஊராட்சி வடக்குத் தோப்பு புளியக்குடி பகுதிகளில் 230-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு ரயில் பாதையை கடந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பெண்கள், முதியவர்கள் ரேஷன் பொருட்களை தூக்கிக் கொண்டு வர முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில், வடக்குத் தோப்பு புளியக்குடி பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.  ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தங்களது சொந்த நிதி ரூ.1 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் நியாய விலைக் கடையை செயல்படுத்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள் , இன்று (மார்ச் 9) வயலில் சமைத்து சாப்பிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் வடக்குத் தோப்பு புளியக்குடி பகுதி மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow