பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்.. மதுரையில் எங்கும் எதிரொலித்த கோவிந்தா முழக்கம்
வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
பச்சைப் பட்டுடுத்தி தங்கக்குதிரை மீதேறி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். மதுரையில் காணும் திசை எங்கும் பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது.
அழகர்கோவில் உள்ள கள்ளழகர் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் விண்ணை பிளக்க கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் கோஷமிட கள்ளழகர் புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) மாலை நடந்தது.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி, இடுப்பில் ஜமதாடு என விதவிதமான ஆயுதங்களுடன் அதிர்வேட்டு முழங்க மதுரைக்கு வந்தார் கள்ளழகர். அழகரை வரவேற்க பக்தர்கள் உறங்காமல் காத்துக்கொண்டிருந்தனர். வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் தங்கி இளைப்பாறி ஆசி வழங்கியபடி திங்கட்கிழமை (ஏப்ரல் 22) அதிகாலையில் மூன்று மாவடிக்கு வந்தார் கள்ளழகர்.
அப்போது அங்கு காத்திருந்த பக்தர்கள் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். எதிர் சேவையின் போது பிரம்மாண்டமான வாண வேடிக்கைகள் கூத்துக்கள் கொட்டு மேளங்கள் என களைகட்டியது. கள்ளழகரின் மேல் அன்பு கொண்ட பக்தர்கள் தாங்களும் கள்ளழகர் போல வேடமிட்டும், கருப்பண்ணசாமியாக வேடமிட்டு அழகரை வரவேற்று ஆடி பாடினர்.
மதுரை மக்களின் வரவேற்பை மனங்குளிர ஏற்றுக்கொண்டு தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் தங்கி ஆசி வழங்கினார் கள்ளழகர். நேற்று ( ஏப்ரல் 22) நள்ளிரவில் அழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்பட்டது. குளிர குளிர அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம் நடைபெற்றது.
இதனையடுத்து சித்திரை முழுநிலவு நாளில் அதிகாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வைகையை நோக்கி கிளம்பினார் அழகர் அப்போது அவர் ஸ்ரீவில்லிபுதூரிலிருந்து ஆண்டாள் நாச்சியார் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டார்.
சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் அழகர் இறங்குவதைக்காண லட்சக்கணக்கான மக்கள் வைகைக் கரையிலும் ஆற்றினுள்ளும் திரண்டுள்ளனர். அதிகாலையில் (ஏப்ரல் 23) 5.50 மணிக்கு மேல் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலித்தார். இன்றைய தினம் கள்ளழகர் பச்சைப் பட்டுப்புடவை உடுத்தி வைகையில் எழுந்தருளியுள்ளார்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டி வந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் அதிகம் நடக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியுள்ளதால் நாடு செழிப்பாக இருக்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அழகர் வரும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம் எதிரொலித்தது. வராரு வராரு அழகர் வராரு.. என்ற பாடலும் எட்டு திக்கும் எதிரொலித்தது.
What's Your Reaction?