Dhanush: மகன் யாத்ராவை சினிமாவில் களமிறக்கும் தனுஷ்... ராயன் படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ்ஸா..?
தனுஷ் மகன் யாத்ரா ராயன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே ராயன் படத்தில் இருந்து புதிய அப்டேட்களை கொடுத்து மிரட்டி வருகிறார் தனுஷ். ஃபீல்குட் மூவியான பவர் பாண்டி மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், இரண்டாவது படத்திலேயே தனது ஃபேவரைட்டான கேங்ஸ்டர் ஜானரில் களமிறங்கவுள்ளார். ஏற்கனவே ராயன் திரைப்படம் வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனை ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துவிட்டது.
அதேபோல், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோரின் போஸ்டர்களும் ராயன் படத்துக்கு அதிக ஹைப் கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம் ராயன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதும் பெரிய பலமாகவே பார்க்கப்படுகிறது. ராயன் படத்தின் கேரக்டர்களை அறிமுகம் செய்துவிட்ட தனுஷ், அடுத்து டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவற்றையும் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.
அதேநேரம், ராயன் படத்தின் டெக்னிக்கல் டீம் பற்றிய அப்டேட்டும் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகவுள்ளன. இதில் ரசிகர்களுக்கு தரமான சர்ப்ரைஸ் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ராயன் படத்தில் தனுஷின் முதல் மகன் யாத்ராவும் அறிமுகமாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வாத்தி, கேப்டன் மில்லர் படங்களின் ப்ரோமோஷன் என பல சினிமா நிகழ்ச்சிகளில் தனுஷுடன் அவரது மகன்களும் பங்கேற்றதை பார்க்க முடிந்தது. அதேபோல் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் யாத்ராவும் லிங்காவும் ஆஜர் ஆகியிருந்தனர்.
முக்கியமாக தனுஷின் முதல் மகன் யாத்ரா, தற்போது ஹீரோ மெட்டீரியலாக வலம் வருகிறார். கோலிவுட்டில் பல முன்னணி இயக்குநர்கள் யாத்ராவை ஹீரோவாக்க முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரோ சினிமோட்டோகிராபியில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், அதனால் ராயன் படத்தில் தனுஷ் தனது மகன் யாத்ராவை ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை யாத்ரா யாரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்ததாகத் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது இது சாத்தியமா எனவும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அப்படி இல்லாத பட்சத்தில் யாத்ரா, உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ராயன் படத்தின் டெக்னிக்கல் டீம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் போது, இந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். எப்படி இருந்தாலும் தனுஷ் வீட்டில் இருந்தும் திரையுலகிற்கு ஒரு வாரிசு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தனுஷின் மூன்றாவது படைப்பான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில், அவரது மருமகன் தான் ஹீரோவாக நடித்து வருவதும் கவனிக்க வேண்டியது.
What's Your Reaction?