ரத்தன் டாடா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் - மகாராஷ்டிரா அரசு
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைந்ததை அடுத்து இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவராக இருந்தவர் ரத்தன் டாடா. தொழிலதிபர் என்பதைத் தாண்டியும் மிகச்சிறந்த மனிதர் என்கிற நற்பெயரைப் பெற்றவர். டாடா நிறுவனத்தின் சொத்துகளில் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களின் வழியே பொதுமக்களுக்கான சேவைகளுக்காக அளித்தவர் ரத்தன் டாடா. மிகவும் எளிமையான மனிதராகத் திகழ்ந்த ரத்தன் டாடா வளமான தேசத்தை உருவாக்க தன்னாலான மிகப்பெரும் பங்களிப்பினை தன் வாழ்நாள் முழுவதும் செய்தார்.
ரத்தன் டாடாவை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளவும், அவரைக் கொண்டாடுவதற்கும் பல செயல்களைச் செய்திருக்கிறார். கொரோனா என்னும் பெருந்தொற்றுக் காலத்தில் அவசர நிலையில் நாடே தத்தளித்த போது, ரத்தன் டாடா அரசுக்கு 1500 கோடி ரூபாயை முதல் தவணையாகக் கொடுத்து உதவியதை என்றைக்கும் மறக்க முடியாது. இப்படியாக இச்சமூகத்துக்காக சிந்தித்த, செயலாற்றிய மாமனிதர் ரத்தன் டாடாவின் மறைவு இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் ரத்தன் டாடாவுக்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடா உடல் மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்திருக்கிறது. அரசு விழாக்கள் எதுவும் இன்று நடைபெறாது. அரசுக் கட்டடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அறிவித்திருக்கிறது.
What's Your Reaction?






