தேர்தல் பத்திரம் - ECக்கு தகவல்களை வழங்கியது SBI... 15ம் தேதி இருக்கு ட்விஸ்ட் !!
உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜூன் 30 வரை அவகாசம் கேட்ட பாரத ஸ்டேட் வங்கி ஒரே நாளில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரும் வகையில் இந்தியக் குடிமகனோ, நிறுவனமோ பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளையில் இருந்து உறுதிமொழி பத்திரத்தை வழங்கும். இந்நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தனியார் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த பிப்ரவரி 15ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி தேர்தல் பத்திர நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார், பணம் பெற்றது யார் உள்ளிட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 6ம் தேதிக்குள் SBI அளிக்க வேண்டும் எனவும் அதனை தேர்தல் ஆணையம் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் விவரங்களை அளிக்கும் கால அவகாசத்தை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி SBI தொடர்ந்த வழக்கு, கடந்த 11ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனக் கேட்ட நீதிபதிகள், இது நாட்டின் நம்பர் 1 வங்கி - இதை எப்படிக் கையாள்வது என SBI-க்கு தெரியாதா என கேள்வியெழுப்பினர். தொடர்ந்து ஒரே நாளில் (மார்ச் 12ம் தேதி) SBI தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தது. இதையடுத்து மார்ச் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதனை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தேர்தல் பத்திர தகவல்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, SBI தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது. தொடர்ந்து மார்ச் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் அத்தகவல்களை தொகுத்து தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வெளியிட உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், மார்ச் 15ம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அத்தகல்கள் குடைச்சலை கொடுக்கும் என கூறப்படுகிறது.
What's Your Reaction?