"இதெல்லாம் வேலைக்கே ஆகாது.." மத்திய அரசு வாக்குறுதியை புறக்கணித்து மீண்டும் போராட்டத்தை அறிவித்த விவசாயிகள்.. இது தான் காரணமா?!
தங்களது அனைத்து கோரிக்கைகளையும் ஏற்காவிடில் நாளை முதல் அமைதியான முறையில் மீண்டும் போராட்டம் தொடரும் என அறிவிப்பு
சில வேளாண் பொருட்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது என்ற மத்திய அரசின் வாக்குறுதியை புறக்கணித்து 4ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், நாளை முதல் மீண்டும் டெல்லி சலோ போராட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க அவசர சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். 3 முறை மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத்தொடர்ந்து, கடந்த 18-ம் தேதி விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சில பருப்பு வகைகள், சோளம் உள்ளிட்டவைகளுக்கு பழைய குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, முடிவு குறித்து பரிசீலிக்க 2 நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் ஷம்பு எல்லையில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கத்தலைவர் சர்வான் சிங், 2-3 பொருட்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதார விலை என்பது தங்களை ஏமாற்றும் செயல் என விவசாயிகள் ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறினார். பருப்பு வகைகளுக்கு ஆதார விலை அளித்தால் ரூ.1.75 லட்சம் கோடி கூடுதல் இழப்பு ஏற்படும் என அமைச்சர் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.
உடலுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை இறக்குமதி செய்ய ரூ.1.75 லட்சம் கோடி செலவழிக்கும் மத்திய அரசு, அதே தொகையை எண்ணெய் வித்துக்களை பயிரிட விவசாயிகளுக்கு ஏன் வழங்குவதில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பினார். எனவே இந்த உத்தரவாதம் விவசாயிகளுக்கு உதவப்போவதில்லை எனவும் குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது வருவாய் அல்ல வாழ்வாதாரம் எனவும் அவர் குறிப்பிட்டார். தங்களது அனைத்து கோரிக்கைகளையும் ஏற்காவிடில் நாளை முதல் அமைதியான முறையில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.
What's Your Reaction?