சாம்சங் தொழிலாளர்கள் 625 பேர் மீது பாய்ந்த வழக்கு.. காஞ்சியில் தொடரும் பரபரப்பு

காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Oct 10, 2024 - 10:00
சாம்சங் தொழிலாளர்கள் 625 பேர் மீது பாய்ந்த வழக்கு.. காஞ்சியில் தொடரும் பரபரப்பு

காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றுபவர்களில் சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் , சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை, சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  சுங்குவார்சத்திரம் பகுதியில் பந்தல் அமைத்து தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிற்சங்க நிர்வாகிகளிடம் 5 முறை நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 6வது கட்டமாக தமிழக அரசு தரப்பில்  அமைச்சர்கள் தா.மோ. அன்பரன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலையில், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சாம்சங் நிர்வாகத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தையில் 14 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சங்கத்தை பதிவு செய்யும் கோரிக்கை மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தள்ளிவைக்கப்பட்டதாகவும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருந்தார்.

அதே நேரம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றும், கோரிக்கைகளை நிறைவேற்ற சாம்சங் நிறுவனம் முன்வந்துள்ளதாக அரசு கூறுவது, போராட்டத்தை திசை திருப்பும் செயல் எனவும்  போராட்டம் தொடரும் என்றும் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் முத்துக்குமார்  கூறியிருந்தார்.

இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்க தொழிலாளர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், புதன்கிழமை 31வது நாளாக போராட்டம் தொடரும் என்றும், போராட்ட பந்தலுக்கு விசிக தொல். திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தலைவர் வேல்முருகன் ஆகியோர் வருகை தர இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் பரபரப்பை எட்டியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவே  போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களில் 10க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களின் வீடுகளுக்கு சென்று கைது செய்துள்ளனர். 

சுங்குவார்சத்திரம் எஸ்.எஸ்.ஐ மதன்குமார் தாக்கப்பட்ட வழக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் போராட்டத்துக்கு அமைக்கப்பட்ட பந்தலையும் காவல்துறையினர் அகற்றி உள்ளனர்.

இதனால் சுங்குவார்சத்திரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை வெற்றி என்று அரசு தரப்பில் அறிவித்ததை மீறி தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொள்வதால், அடக்கு முறையை அரசு ஏவியுள்ளதாக சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புக்குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் தொழிலாளர்கள் மீதான கைது நடவடிக்கை குறித்து சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.  நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என்றும்,  அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மறுத்து விட்டதால்  விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை தெரிவித்தது. 
இதையடுத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடை இல்லை என்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். 

இதையடுத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக  625 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow