Mari Selvaraj: கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன்… மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் பைசன்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாரி செல்வராஜ், அடுத்தடுத்து கர்ணன், மாமன்னன் படங்களை இயக்கினார். இதில், தனுஷின் கர்ணன் படமும், உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னனும் சூப்பர் ஹிட் அடித்தன. இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் 4வது படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்பட்டது.
பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் படம் குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்துக்கு ‘பைசன் காளமாடன்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கபடி போட்டியில் ரைடு செல்வதை போல செம்ம மாஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார் துருவ் விக்ரம். அவருக்கு பின்னால் காட்டெருமையின் உருவம் உள்ளது. இந்த போஸ்டரை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள மாரி செல்வராஜ், “கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
வித்தியாசமாக உருவாகியுள்ள பைசன் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சீயான் விக்ரமின் மகனாக அறிமுகமான துருவ்விற்கு இதுவரை தரமான கம்பேக் அமையவில்லை. அது பைசன் படத்தின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரி செல்வராஜ் படத்திற்காக ஏற்கனவே கபடி பயிற்சி எடுத்து வந்தார் துருவ் விக்ரம். இதனையடுத்து பைசன் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது.
நெல்லையில் தொடங்கிய பைசன் படப்பிடிப்பை, சீயான் விக்ரம் க்ளாப் அடித்து ஆரம்பித்து வைத்தார். அப்போது பா ரஞ்சித், மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோரு உடனிருந்தனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கவுள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷனுடன், அப்ளாஸ் நிறுவனமும் இணைந்து பைசன் படத்தை தயாரிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணனுக்குப் பின்னர் திருநெல்வேலி பகுதியை பின்னணியாக வைத்து பைசன் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இதுவும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?