மயிலாடுதுறை சிறுத்தை நடமாட்டம்.. எல்லாமே பொய்யா கோப்பால்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட இளைஞர்
மயிலாடுதுறை அடுத்த தேரழுந்தூரில் சிறுத்தை நடமட்டம் இருப்பதாக சிசிடிவி வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் தவறாக பதிவிட்டதாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை நகரில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காட்டு பகுதியில் 3 ராட்சச கூண்டுகள் ஆடுகள் இறைச்சி வைத்தும் 16 கண்காணிப்பு கேமரா பொருத்தியும் கூண்டில் சிறுத்தை அகப்படும் என்று காத்து வருகின்றனர்.
கூண்டுகளில் சிறுத்தை சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்துடன் இருந்து வருகின்றனர். பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இரண்டு நாட்களாக ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்த நிலையில் பதற்றமும் அச்சமும் மேலும் அதிகரித்தது. ஆடுகளை சிறுத்தை கடித்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் ரயில்வே நிலையத்தில் ஆட்டினை நாய்கள் கடித்துக் கொன்றுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே நேற்று தேரெழுந்தூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சீனிவாசபுரத்தை சேர்ந்த அமீர்பாஷா மகன் பைசல் அகமது,30 சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் தேரழுந்தூர் கிராமத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டதில் வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்ட வீடியோ போலியானது என்று தெரியவந்தது.
அந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பைசல் அகமது வீட்டிற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை செய்தனர். இதில் தான் வெளியிட்ட வீடியோ போலியானது என்றும் இதை பொது வெளியில் யாரும் பகிர வேண்டாம் என்றும் தவறாக பதிவிட்டுவிட்டேன் என்றும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?