எமனை வதம் செய்யும் காலசம்ஹாரமூர்த்தி.. திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்கோவிலில் இறைவன் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெறும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

Apr 6, 2024 - 13:02
எமனை வதம் செய்யும் காலசம்ஹாரமூர்த்தி..  திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா  திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்வாய்ந்த ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில்  உள்ளது. இங்கு மார்க்கண்டேயர் உயிரைக் காப்பாற்றுவதற்காக இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்ப்பித்த தலம். 

மார்க்கண்டேயர் என்றும் 16 சிரஞ்சீவியாக வாழும் வரத்தை இவ்வாலயத்தில் பெற்றதால் இக்கோயிலில்  ஆயுள் விருத்தி வேண்டி வயதான தம்பதிகள் ஆயுள்  ஹோமம் செய்து திருமணங்கள் மற்றும்  பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். பல்வேறு சிறப்புகள் உடைய இந்தத் தலம் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணத்தலமாகத் திகழ்கிறது. இவ்வாலயத்தில் இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெறும்.

வேண்டியதை வேண்டியபடி அருளும் கற்பக விருட்சமாக அருள்புரிகிறாள், அன்னை அபிராமியம்மை. சரபோஜி மன்னர் ஆட்சிக்காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள் தை அமாவாசையை  முழுப் பௌர்ணமியாக்கி அபிராமி அந்தாதி அருளச் செய்த தலம். இங்கு அன்னை அபிராமி தன்னை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் இருள்நீக்கி ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை எல்லாம் அருள்புரிகிறாள்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதனை முன்னிட்டு விநாயகர், முருகன், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன்,  சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்தின் முன்பு  எழுந்தருளினர். புனித நீர் கடங்கள் பூஜிக்கப்பட்டது. கொடி மரத்திற்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரிஷபக் கொடியேற்றப்பட்டது.  விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் கோயில் நிர்வாகத்தினர்  கோயில் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமியும் அம்மனும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 16ஆம் தேதி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் சாமி திருக்கல்யாணம் நடைபெறும். 19 ஆம் தேதி  இரவு காலசம்ஹாரமூர்த்தி எமனை வதம் செய்யும் ஐதீக திருவிழாவும்,21ஆம் தேதி காலை தேரோட்டமும்  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow