மலேசியாவில்  சித்ரவதைக்கு ஆளாகும் தமிழர்... மீட்க கோரி பெற்றோர் கண்ணீர்...

Apr 11, 2024 - 07:55
மலேசியாவில்  சித்ரவதைக்கு ஆளாகும் தமிழர்... மீட்க கோரி பெற்றோர் கண்ணீர்...

வேலைக்காக மலேசியா சென்ற மயிலாடுதுறை இளைஞர் ஒருவர், சித்ரவதைக்கு ஆளாவதாகவும், அவரை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டுமென்றும் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

மயிலாடுதுறை மாவட்டம் நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். அவரது மகன் சக்திவேல், சிவகங்கையைச் சேர்ந்த ஏஜெண்ட் ராம்நாத் என்பவர் மூலமாக 2015 ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள உணவகத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். புகாரி என்பவரது உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த சக்திவேல், மாதா மாதம் சம்பளப் பணத்தை தனது குடும்பத்திற்கு அனுப்பிவைத்தார். அடிக்கடி குடும்பத்தினருடன் பேசியும் வந்தார்.

2015 ஆம் ஆண்டு மலேசியா சென்றவர், 2022 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பியிருக்க வேண்டும். கடந்த ஆண்டும் ஊருக்குச் செல்லவேண்டும் என்று சக்திவேல் உணவக முதலாளியிடம் கேட்டுள்ளார். அதற்கு, அவரது பாஸ்போட்டை பிடுங்கிக் கொண்ட முதலாளி, அவரை அடித்து, தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்து வருவதாக சக்திவேலுடன் வேலை செய்யும் சக உழியர் ஒருவர் அவரது பெற்றோருக்கு வீடியோ கால் செய்து தகவல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அவரை உடனடியாக மீட்டு சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக்திவேலின் பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow