வாய்மையே வெல்லும்.. மனசுல பதிவு பண்ணுங்க.. அரசு அதிகாரிகளுக்கு அட்வைஸ் செய்த நீதிபதி

விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுரை கூறிய நீதிபதி, விசாரணையை நியாயமான முறையிலும், வெளிப்படை தன்மையுடனும் நடத்த வேண்டும் என்றார்.

May 13, 2024 - 15:42
வாய்மையே வெல்லும்..  மனசுல பதிவு பண்ணுங்க.. அரசு அதிகாரிகளுக்கு அட்வைஸ்  செய்த நீதிபதி

நமது அரசாங்க  முத்திரையில் உள்ள முழக்கமான  "வாய்மையே வெல்லும்" என்ற வாசகத்தை ஒவ்வொரு அரசு ஊழியரும் கருத்தில் கொண்டு பணி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசித்துவரும் மனோஜ், அருண் குமார் ,  புவனேஷ் ,  ராஜா, வசந்த குமார்  உள்ளிட்டோர்,  அனுமதியின்றி பிளெக்ஸ் போர்டு வைத்ததாக தங்கள் மீது பரமக்குடி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் காட்டு பரமக்குடி விவசாயப் பண்ணைக்கு அருகில்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் பிளெக்ஸ் போர்டை வைத்தததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது,  

தொடர்ந்து மனுதாரர் தரப்பில்,  பிளெக்ஸ் போர்டில் ஆட்சேபனைக்குரிய விளம்பரம் ஏதும் அமைக்கப்படவில்லை. பலர் அனுமதி இல்லாமல் பிளெக்ஸ் போர்டை வைத்த நிலையில் தங்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து பேசிய நீதிபதி புகழேந்தி, வழக்கு விசாரணை ஆரம்ப  கட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். மனுதாரர்கள் எழுப்பிய காரணங்களை விசாரணையின் போதே, விசாரணை அதிகாரி நன்கு பரிசீலிக்க முடியும் என்றார். 

அத்துடன்,  எஃப்ஐஆர் என்பது காவல்துறையின் பதிவேட்டில் புகாரைப் பதிவு செய்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.  விசாரணையின் நோக்கம் புகார் உண்மையானதா, இல்லையா  என்பதைக் கண்டறிவது என மனுதாரர்களிடம் தெரிவித்தார். 

தொடர்ந்து விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுரை கூறிய நீதிபதி, விசாரணையை நியாயமான முறையிலும், வெளிப்படை தன்மையுடனும் நடத்த வேண்டும், புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமர்ப்பிக்கும் சாட்சியங்களைக் கருத்தில் கொண்டு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

மேலும், நமது அரசாங்க  முத்திரையில் உள்ள   "வாய்மையே வெல்லும்" என்ற வாசகத்தை கருத்தில் கொண்டும் பணி செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இறுதியாக மனுதாரர்கள்  விண்ணப்பத்தில் எழுப்பப்பட்ட கருத்துகளை பரிசீலித்து, விசாரணை நடத்தும் அதிகாரி இறுதி அறிக்கையை 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow