திடீரென மூடப்பட்ட தொழிற்சாலை.. வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஊழியர்கள்.. தேர்தலை புறக்கணிக்க முடிவு
சிவகங்கையில் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட தனியார் பிஸ்கெட் தொழிற்சாலையால் 18 மாதங்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள தொழிலாளர்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 35 ஆண்டுகளாக தனியார் பிஸ்கட் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் தற்காலிகமான உற்பத்தி நிறுத்தம் என்று மாவட்ட ஆட்சியருக்கும் தொழில்துறை சங்கத்தினருக்கும் தவறான தகவலை கூறி தொழிற்சாலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வேலை பார்த்த 250 ஊழியர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
தொழிற்சாலை நிர்வாகம் தங்களது சம்பளத்தில் பிடித்த பணத்தை அரசு பெற்று தர வேண்டும் என்று தொழிலாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்ததுடன் அவ்வபோது தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த 250 குடும்பங்களும் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறி திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது தாசில்தார் தேர்தல் வேலைக்கு சென்றதால் தங்களது வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பது சம்பந்தமாக அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் மனு கொடுத்தனர். தங்கள் பிரச்னைக்கு தீர்வு காணாமல் வாக்களிக்க மாட்டோம், தேர்தலை புறக்கணிப்போம் என்று தொழிலாளர்கள் கோஷமிட்டனர். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
What's Your Reaction?