அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தலா 50 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. லஞ்சஒழிப்புத்துறை தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
பொன்முடி தரப்பில், மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும், இவற்றை விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் டிச.19ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியின் வருமானத்தை தனித்தனியாக கணக்கிட்டு, இரண்டு பேர் வருமானத்தையும் சேர்த்து விசாரணை செய்யாமல் சிறப்பு நீதிமன்றம் தவறு செய்துள்ளது.
பொது ஊழியரான அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி, கணவருக்கு வந்த வருமானத்தில் தன் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்.அவருக்கு ஏற்கனவே உள்ள மூலதன வருமானம் மூலமே இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதா? என்பதை சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்து இருக்க வேண்டும்.
ஆனால், 2006-11 வரையிலான 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, விசாலாட்சியின் தனிப்பட்ட வருமானத்தில் இருந்து வாங்க முடியாது என்பதை சிறப்பு நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. அமைச்சர் பொன்முடி தன் மனைவி விசாலாட்சி பெயரில் பெரும்பாலான சொத்துக்களை வாங்கியதற்கு நம்பத்தகுந்த காரணங்கள் இருந்தும் அதை ஏற்காமல் சிறப்பு நீதிமன்றம், வருமான வரிக் கணக்கு அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.
2006- 11ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய், அதாவது வருமானத்தை விட 64.90 சவீதத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளதால் இருவரையும் குற்றவாளிகள் என தீர்மானித்து தண்டனை அறிவிப்பதற்காக வழக்கு டிச.21 ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி காலை 10 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தனர். உடனடியாக அவர்களின் காரில் இருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டது. சரியாக 10.42 க்கு நீதிமன்ற அறைக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் வந்தார்.
அப்போது, தண்டனை அறிவிப்பதற்கு முன் பொன்முடி தரப்பில் ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். இதையடுத்து பொன்முடி தரப்பில், தனக்கு 70 வயதாகிறது, மனைவி விசாலாட்சிக்கு 63 வயதாகிறது. அதனால் மருத்துவ காரணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடைத்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த இருவருக்கும் உத்தரவிட்டார்.
What's Your Reaction?