கோயம்பேடு சந்தையில் கழிவுகளை அகற்ற கூடுதல் பணியாளர்கள் நியமனம் - அமைச்சர் சேகர்பாபு
பருவமழை காலங்களில் கோயம்பேடு மார்க்கெட்டில் தேங்குகிற கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் சி.எம்.டி.ஏ சார்பில் சீரமைக்கப்பட்டு வரும் மினி கிளினிக் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு
“சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பெருமழை வெள்ளத்தின் போது ஏற்படுகிற தண்ணீர் தேக்கத்துக்கு நிரந்தரத் தீர்வாக முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கு உண்டான ஒப்பந்தங்கள் நிறைவு பெற்று பருவமழையைப் பொறுத்து அந்தப் பணிகள் தொடங்க இருக்கின்றன. ஏற்கனவே புதிதாக கட்டப்பட இருக்கிற கால்வாயைத் தவிர்த்து 850 மீட்டர் தொலைவிற்கும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி துவங்கிய போது கட்டப்பட்ட கால்வாயும் மறுசீரமைக்கப்பட உள்ளது.
தற்போது கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி அருகில் சி.எம்.ஆர்.எல் பணியும் நடைபெற்று வருகிறது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கட்டப்பட இருக்கிற கால்வாய்ப் பணிகளும் பருவமழைக்குப் பிறகுதான் முழுமையாகக் கட்டுமானப் பணிகள் நிறைவுறுகிற சூழலில் இருக்கிறது.
எனவே பணிகள் நடைபெறுகிற இடத்தில் மழை தேங்குகிற தண்ணீரை வெளியேற்றுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 60 எச்.பி அளவிற்கு புதியதாக மின் மோட்டார்கள் கொள்முதல் செய்யப்பட்டு உடனடியாக அப்பகுதிகளில் மோட்டார்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து வெளியேற்றப்படுகிற நீர் சென்றடைகிற பகுதியையும் கால்வாயையும் சுத்தப்படுத்தும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் அந்தப் பணிகள் அனைத்தும் இன்றைக்கு தொடங்க இருக்கிறது. அந்தக் கால்வாய்ப் பகுதிகளில் இருக்கிற கசடுகளும் உடனடியாக அகற்றப்பட இருக்கிறது.
மழை எச்சரிக்கை விடுத்திருக்கிற தேதிகளில் கூடுதலாகப் பணியாளர்கள் கால்வாய்களில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். இந்தப் பெருமழையை சமாளிப்பதற்கும் வெள்ளம் ஏற்பட்டால் சமாளிப்பதற்கும் உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துகிற நிகழ்வாக இந்த ஆய்வு அமைந்திருக்கிறது.
கோயம்பேடு சந்தையில் தேங்குகிற கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு பருவமழைக் காலங்களில் 20 பணியாளர்களை கூடுதலாக நியமிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. நாளைக்கே சுழற்சி முறையில் பணியாளர்கள் சேருகிற குப்பைகளை அகற்றுவதற்கு உண்டான பணிகளைத் துரிதப்படுத்துவார்கள்” என்று அவர் கூறினார்.
அடுத்து அவரிடம் கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்துக் கேட்டதற்கு, “விபத்து நடந்த உடன் முதலமைச்சர் அமைச்சர்களை அனுப்பி விட்டார். அந்த மாவட்ட அமைச்சர் நாசர், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். துணை முதலமைச்சரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கும் களத்திற்கு சென்று இருக்கிறார்.
இந்த ஆட்சியில்தான் அதிகாரிகளும் அரசியல் கட்சியும் பொறுப்பில் இருப்பவர்களும் ஒன்று சேர பணியாற்றுகிறோம்” என்று கூறினார்.
What's Your Reaction?