சர்ச்சையான நடிகர் கார்த்தியின் லட்டு பேச்சு… கொதித்துப்போன பவன் கல்யாண்..!

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்வி நடிகர் கார்த்தி அளித்த பதிலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். 

Sep 24, 2024 - 21:56
சர்ச்சையான நடிகர் கார்த்தியின் லட்டு பேச்சு… கொதித்துப்போன பவன் கல்யாண்..!

திருப்பதி ஏழுமலையான் பிரசாதமான லட்டில்  விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசாங்கம் சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளது.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு விவகாரத்தில், கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார். அதேபோல் திருப்பதி லட்டு விவகாரத்தில் கோயில் புனிதம் கெட்டுவிட்டதால், அதற்கு பரிகாரமாக 3 நாட்கள் சிறப்பு யாகங்களையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்தது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இது போன்ற பிரச்னைகளை ஆராயத் தேசிய அளவில் 'சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்' என்ற அமைப்பை நிறுவ கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், நடிகர் கார்த்தி திருப்பதி லட்டு குறித்து பேசியது சர்ச்சையில் சிக்கியாகியுள்ளது. 

நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படம் தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம், தொகுப்பாளர் லட்டு குறித்து கேல்வி எழுப்பியபோது, ”இப்போ லட்டு குறித்து பேச வேண்டாம், அது சென்சிடிவ்வான விஷயம், அது குறித்து இப்போ பேச வேண்டாம்” என்று கார்த்தி கூறினார். இதைக்கேட்டு அரங்கில் இருந்த பலர்,கைத்தட்டி சிரித்தனர்.

இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி லட்டு குறித்து பேசியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்தேன். லட்டு குறித்து பேசினால் சர்ச்சையாகும் என கூறியுள்ளனர். அவ்வாறு சொல்லக் கூடாது. நான் உங்களை நடிகர்களாக மதிக்கிறேன். ஆனால் சனாதன தர்மத்தை பற்றி பேசும் போது, ஒன்றுக்கு 100 முறை யோசித்து பேச வேண்டும் ”என்று கூறினார்.

பவன் கல்யாணின் கருத்தைத் தொடர்ந்து, "மரியாதைக்குரிய பவன் கல்யாண் அவர்களே, லட்டு குறித்து நான் பேசியதால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை கடைபிடித்து வருகிறேன்" என நடிகர் கார்த்தி தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow