தோண்ட தோண்ட வெளி வரும் பூதம்.. 29 நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட இடத்தில் கிடைக்கும் வெடி பொருட்கள்

Apr 17, 2024 - 18:21
தோண்ட தோண்ட வெளி வரும் பூதம்.. 29 நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட இடத்தில் கிடைக்கும் வெடி பொருட்கள்

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்கள் கிடைத்துள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், கான்கேர் மாவட்டத்தில் பினாகுண்டா கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

4 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நக்சலைட்டுகள் 29 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், மேலும் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், "கொல்லப்பட்ட 29 பேரும் நக்சலைட்டுகள் தானா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் சில கிராமவாசிகளும் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அரசு விளக்கம் வேண்டும்" என வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow