டெல்லி புதிய முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி…!
டெல்லி முதலமைச்சராக அரவிந்த கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றுக் கொண்டார்.
மதுபான கொள்கை வழக்கில் கைதாகி இருந்த டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த ஜாமீனில், அவர் வகித்து வந்த டெல்லி முதலமைச்சர் பதவியை தொடர முடியாதபடி பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், “இன்னும் சில மாதங்களில் வரும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்புக்கு பின்னரே டெல்லி முதலமைச்சர் பதவியை ஏற்பேன்” என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, டெல்லி மாநில பொதுப்பணித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷியை டெல்லியின் புதிய முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார்.
டெல்லியின் அடுத்த முதலமைச்சராக அதிஷியை நியமிக்க ஆம் ஆத்மி சார்பில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதம் மற்றும் அதிஷியை டெல்லி முதலமைச்சராக அறிவிக்க ஆதரவு கடிதம் என இரண்டையும் வழங்கினார் அரவிந்த கெஜ்ரிவால்.
இந்த நிலையில், அரவிந்த கெஜ்ரிவால் வழங்கிய இரண்டு கடித்தத்தையும் ஏற்றுக் கொண்ட துணை நிலை ஆளுநர் சக்சேனா, இன்று டெல்லியின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அதிஷிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன், கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், முகேஷ் அஹ்லாவத், கைலாஷ் கெஹ்லோட், இம்ரான் ஹுசைன் ஆகிய 5 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
டெல்லியின் 8வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள 43 வயதான அதிஷி, சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்கு பிறகு டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக பதவி ஏற்றவர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தியாவில் தற்போது, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அதிஷி என 2 பெண் முதலமைச்சர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?