சட்டமன்றம் - பட்ஜெட் - பரபரப்பு.. டெல்லிக்கு திடீரென கிளம்பிய ஆளுநர்! முக்கிய மீட்டிங் இதற்காகவா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், ஆளுநர் திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து வரும் நிலையில்,அவர் பாஜகவின் முகவர் போல் செயல்படுகிறார் என்று தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வருகிறது. ஆளுநரும் அதற்கேற்றாற் போல் திமுகவை விமர்சிப்பதும், சட்டப்பேரவை உரையை வாசிக்க மறுத்தது தமிழகம் அரசியலில் பேசுபொருளானது.
குறிப்பாக, கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்த தமது உரையைப் பாதி மட்டுமே வாசித்துவிட்டுப் புறப்பட்டார். அன்று, திருக்குறளுடன் உரையைத் தொடங்கிய ஆளுநர், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களைப் பட்டியலிட வரும் நேரத்தில், உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருப்பதால் உரையில் உள்ளவற்றை வாசிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
அதன்பின் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்த நிலையில், நாட்டுப்பண் முடியும் முன்பே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர், தமது செயல் குறித்து விளக்கக் குறிப்பு ஒன்றையும் ஆளுநர் வெளியிட்டார். அதில் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் நாட்டுப்பண் இசைக்கப்படவில்லை, ஆளுநர் உரையில் சொன்ன திருத்தங்களை மேற்கொள்ளவில்லை, சபாநாயகர் கண்ணியம் காக்கவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வைத்து தமது செயலுக்கான விளக்கத்தைக் கொடுத்தார்.
பின்னர், அவரது உரை மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடந்தேறின. இதையடுத்து இன்று மாநில பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரப் பயணமாக திடீரென்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் செயல்பாடுகள், சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்த தகவலை ஆளுநர் அமித் ஷாவுடன் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால் அதற்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளுநரின் இந்தத் திடீர் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?