பயங்கரவாதிகளை நாங்கள் வீடு புகுந்து அழிக்கிறோம்..! காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி
இந்திய நாட்டைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் காங்கிரஸின் இளவரசருக்கு காய்ச்சலே வந்துவிடுகிறது - பிரதமர் மோடி விமர்சனம்
பாகிஸ்தானிடம் பயங்கரவாதிகளை குறித்த ஆவணங்களை காங்கிரஸ் சமர்ப்பித்துக் கொண்டிருந்த நிலையில், பாஜக ஆட்சியில் பயங்கரவாதிகளை வீடு புகுந்து அழித்து வருகிறோம் என்று பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் 18-வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின்போது பின்பற்றப்பட்டதை விட, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் பாஜக அரசின் அணுகுமுறை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்று பேசினார்.
காங்கிரஸ் ஆட்சியின்போது பாகிஸ்தானில் இருந்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வந்த நிலையில், பாஜக அரசு பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று கூறினார். மேலும் இந்தியாவில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து காங்கிரஸ் கட்சி ஆவணங்களை அனுப்பியதாக கூறிய பிரதமர், பாஜக அரசு பயங்கரவாதிகளை வீடு புகுந்து கொலை செய்து வருகிறது என ஆவேசமாக பேசினார்.
எதிர்க்கட்சியினரின் கூட்டணியில் குழப்பம் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, அவர்கள் கணக்குப்படி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் ஆகும் புதிய திட்டத்தைத் தங்களுக்குள் வகுத்துக் கொண்டுள்ளனர் என்று பேசினார். இத்தகைய அமைப்பில் நாட்டின் நலனை எதிர்பார்க்க முடியாது என்றும், தவணை முறையில் பிரதமர் ஆகி நாட்டை வழிநடத்த முடியாது என்றும் கூறினார். இவர்களை நம்பி எப்படி ஆட்சியை ஒப்படைப்பது என்றும் கேள்வி எழுப்பினார்.
ஒருங்கிணைந்த மற்றும் வளர்ச்சியடைந்த இந்திய நாட்டைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் காங்கிரஸின் இளவரசருக்கு காய்ச்சலே வந்துவிடுகிறது என்றும், ராகுல் காந்தியை சுட்டிக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார்.
What's Your Reaction?