இது புது ப்ளானா இருக்கே..! ஆட்சியை காப்பாற்ற எடுத்த அஸ்திரம்.. அரவிந்த் கெஜ்ரிவாலின் அடடே ஐடியா!!
தமது எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதாக ஆம்ஆத்மி குற்றம்சாட்டிய நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
டெல்லியில் புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் 6வது முறையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 5 முறை சம்மன் அனுப்பப்பட்ட போதும், அனைத்தையும் அவர் புறக்கணித்த நிலையில், 21ம் தேதி நேரில் விளக்கமளிக்க மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதோடு ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதாகவும் தொடர் புகார் எழுந்தது. இந்நிலையில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் டெல்லி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நிலையில், வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, டெல்லி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால் அரசைக் கவிழ்ப்பதே பாஜகவின் நோக்கம் என அவர் கூறினார். 21 எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், 21 பேரில் 7 எம்.எல்.ஏக்களை தலா 25 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெல்லும் பட்சத்தில், ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினாலும் 6 மாதங்களுக்கு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது என்பதும், அதற்குள் மக்களவைத் தேர்தல் முடிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?