மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு..பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Apr 30, 2024 - 21:01
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு..பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் பள்ளி தாளாளர், செயலாளர் உள்ளிட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி +2 படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளியில மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பள்ளியில் இருந்த பொருட்களும் சூறையாடப்பட்டது.

இதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து அவரது தாய் செல்வி சின்னசேலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் ஸ்ரீமதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது, இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், வழக்கில் இருந்து நீக்கம் செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவியின் தாயார் செல்வி கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு கடந்த மே 16-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது செல்வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வழக்கில் இருந்து நீக்கப்பட்ட 2 ஆசிரியைகளையும் மீண்டும் சேர்க்க வேண்டும். வழக்கிற்கு தேவையான குற்றப்பத்திரிகை நகல் மற்றும்  சாட்சியங்களின் பதிவு விவரம் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட வழக்கு, இன்று (30-04-2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையை பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் அன்றைய தினம் விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் நீதிபதி ஆணையிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow