95 விழுக்காட்டிற்கு மேல் பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே தீபாவளிக்கு 20% போனஸ் வழங்கப்பட்டது.

Jan 9, 2024 - 11:32
Jan 9, 2024 - 11:42
95 விழுக்காட்டிற்கு மேல் பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

95 விழுக்காட்டிற்கு மேல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட கூடும் என கூறப்பட்ட நிலையில், போக்குவரத்து சேவை தடைபட்டுவிடாமல் சீராக இயக்கப்பட்டு அரசு அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் தற்காலிக பேருந்து ஓட்டுநர், நடத்துநரை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 95 விழுக்காட்டிற்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம். பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என எண்ணி தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே தீபாவளிக்கு 20% போனஸ் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 14,214 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. சென்னையில் 95% பேருந்துகளும், விழுப்புரத்தில் 84%, சேலம் 98%, கோவை 95%, கும்பகோணம் 91% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மதுரை 98%, நெல்லை 98%, நீலகிரியில் 80% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக பேசியுள்ள அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலகண்ணன், ”கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மதியம் பணிக்கு வருவோரை வைத்து காலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைவரும் இன்றே பணிக்கு வந்துவிட்டால் பொங்கல் பண்டிகைக்கு எப்படி பேருந்து இயக்கப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கிராமப்புறங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கடலூரில் அரசு பேருந்தை இயக்க முயன்ற தற்காலிக பேருந்து ஒட்டுநரை முற்றுகையிட்டு தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow