சீர்காழியில் கொட்டித்தீர்த்த கனமழையால் மிதக்கும் நெற்கதிர்கள்
முறையாக வாய்க்கால்கள் தூர்வாராததே இப்படியொரு பாதிப்புக்கு காரணமாகிவிட்டது
சீர்காழியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வீடு மற்றும் கடைகளுக்குள் மழை நீர் புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மழைநீரில் நெற்கதிர்கள் மிதப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்காவில் நேற்று விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் நகர் பகுதிகளில் உள்ள வீடு மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு, அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சாய்ந்து மழை நீரில் மிதப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
சீர்காழி நகரில் மட்டும் சுமார் ஒரே நாள் இரவில் சுமார் 24 செ.மீ மழை கொட்டியதால் நகராட்சிக்குட்பட்ட இரணியன் நகர், மாரிமுத்து நகர், தட்சிணாமூர்த்தி நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.அத்துடன் நகரின் மையப்பகுதியான தென்பாதி மெயின்ரோடு, இந்திரா நகர், எம்.எல்.ஏ அலுவலக பகுதி, தாசில்தார், ஆர்.ஐ குடியிருப்புகள் அமைந்துள்ள முதன்மை சாலை ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவு நீர் தேங்கியதோடு, அந்த பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நகராட்சித்தலைவர் துர்கா பரமேஸ்வரி, ஆணையர் ஹேமலதா ஆகியோர் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு மழை நீர் வடியக்கூடிய வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து மழை நீரை வடியச்செய்தனர்.
இதேபோல் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோவில் வளாகத்தில் கனமழையால் குளம் போல் தேங்கிய நீரில் பக்தர்கள் பெரும் சிரமத்துடன் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 2022ம் வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி தமிழகத்திலேயே சீர்காழியில் மட்டும் அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்திற்குள் 44 செ.மீ மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் நேற்று இரவு மட்டுமே 22 செ.மீ மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 22. செ.மீ மழையால் பெருமளவில் அறுவடைக்கு தயாரான நெற்கதிகள் சாய்ந்து மழை நீரில் மிதப்பதால் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே” என விவசாயிகள் பெரும் மனவேதனையில் உள்ளனர்.
விவசாயிகளிடம் பேசினோம். ”இந்த வாரத்தில் மட்டும் 50000 ஏக்கர் பரப்பளவில் நன்கு விளைந்திருந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத இந்த கனமழை ஒட்டுமொத்த பயிர்களையும் பாழாக்கிவிட்டது. தற்போது வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முறையாக வாய்க்கால்கள் தூர்வாராததே இப்படியொரு பாதிப்புக்கு காரணமாகிவிட்டது. ஆளும்கட்சியினர் தூர்வாருகிறோம் என்றபடி பணத்தை மட்டுமே வாருகிறார்கள். தமிழக அரசு முறையாக கணக்கெடுப்பு நட்த்தி உண்மையிலேயே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றனர் சோக்குரலில்.
-ஆர்.விவேக் ஆனந்தன்
What's Your Reaction?