அதிமுகவை மீட்டெடுப்பதே எனது தர்மயுத்தம்- ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் உறுதி

நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணியில் நாங்களும் செயல்படுவோம்.

Jan 4, 2024 - 22:22
அதிமுகவை மீட்டெடுப்பதே எனது தர்மயுத்தம்- ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் உறுதி

மோடிக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி தவிர தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளுடன் வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி‌ அமைத்து தேர்தலை சந்திப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளரான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் மக்களவைத் தேர்தலையொட்டி கழக தொண்டர்கள் ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம்,இணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.சி.டி.பிரபாகர், கொள்கை பரப்பு செயலாளர் வி.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ரங்கநாதன் வரவேற்று பேசினார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் அதிமுகவை மீட்டெடுக்க ரூ.25லட்சம் வழங்குவதாக அறிவித்து அதற்கான காசோலையை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில், எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது 16 லட்சம் உறுப்பினர்களே இருந்தனர். அதன்பிறகு ஜெயலலிதா கட்சியில் இருந்தபோது 1.50 கோடி பேர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்து கட்சியை எக்குக்கோட்டையாகவும் மாற்றினார். தொண்டர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை கடந்த 1972ல் எம்ஜிஆர்.உருவாக்கினார். அந்த விதிகளை மீறி எடப்பாடி கே.பழனிசாமி பொதுச்செயலாளராக ஆகியருக்கிறார். ரவுடிகளை வைத்துக்கொண்டு பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்வு செய்யப்பட்டார்.

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்த காலத்திலிருந்து இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.ஈரோடு இடைத்தேர்தலில் கூட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை. தோல்விக்காக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இதன்மூலம் அதிமுக என்ற இயக்கம் சீர்குலைந்து வருவதை உணர முடிகிறது.முதல்வர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுத்தேன்.என்னை மதிக்காமல் தரக்குறைவாக பேசுகிறார். திமுகவுக்கு போய் விட்டேன் என்கிறார்.சசிகலா, எடப்பாடியை முதல்வராக்கினார். அவரையும் தரக்குறைவாக பேசினார்.

எடப்பாடி ஆட்சிக்கு பிரதமர் மோடி பாதுகாப்பாக இருந்தார்.இப்போது அவரையும் மதிக்காமல் அவருடன் கூட்டணி கிடையாது என்று பேசி வருகிறார். உயர்வதற்கு காரணமாக இருந்தவர்களை எப்போதும் மதிக்காத எடப்பாடியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது தர்மயுத்தம். இதற்காகவே தமிழகம் முழுவதும் மீட்புக்குழுக்களை நியமித்து வருகிறோம் என பேசினார்.

மேலும், அதிமுகவை மீட்டெடுக்க மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் வழங்கிய ரூ.25லட்சம் நிதி மீட்புக்குழுவுக்கு வந்துள்ள முதல் நிதி என்றும் கொடுத்தவர் ராசியானவர் என்பதால் தொடர்ந்து நிதி அதிகமாக வரும் என்பதில் சந்தேகமில்லை என்றும் இந்த நிதியை தொண்டர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை  சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், கிளாம்பாக்கத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் 90 சதவீதம் பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டன.அதன்பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாட்டை நாளை யார் ஆளப்போவது  என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாரத பிரதமர் 10 ஆண்டு காலம் ஆட்சி சிறப்பாக இருந்தது. அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத்தேர்தலில் கூட நரேந்திர மோடி தான் பாரதப் பிரதமராக வரவேண்டும்.

உறுதியாக நாங்கள் கூறிய நிதியை பொங்கல் தொகுப்பு அரசு வழங்க வேண்டும். இல்லை என்றால் அதைக்கொடுக்கிற வரைக்கும் எங்களுடைய கோரிக்கை வலுவாக இருக்கும்.மோடிக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தவிர தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளுடன் வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி‌ அமைத்து தேர்தலை சந்திப்போம். நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணியில் நாங்களும் செயல்படுவோம். மேலும் எடப்பாடி பழனிசாமியின் ரகசியங்களை வெளியே சொல்ல வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என ஓ.பன்னீர்செல்வம் சிரித்துக்கொண்டே பதலளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow