புதுச்சேரி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புயல் முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

Dec 1, 2023 - 15:50
Dec 1, 2023 - 19:10
புதுச்சேரி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புயல் அறிவிப்பு காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற 3ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் அது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 4ம் தேதி மாலை வடதமிழகம் மற்றும் தெற்குஆந்திரா கடலோரப் பகுதிகளான சென்னைக்கும், மச்சிலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மேலும் கடல் அலைகள் வழக்கத்தை விட கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதனிடையே புயல் முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீனவர்கள் தங்களின் படகுகள், வளைகள் மற்றும் படகு மோட்டார்கள் ஆகியவற்றை பாதுகாப்பான பகுதிகளில் வைக்கவும் மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow