பணத்தை வழிப்பறி பண்ணிட்டாங்க.. சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்! ஆனா போலீஸுக்கே ட்விஸ்ட்டு

என்ன உள்குத்து இருக்குமோ எனக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

Apr 5, 2024 - 14:11
பணத்தை வழிப்பறி பண்ணிட்டாங்க.. சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்! ஆனா போலீஸுக்கே ட்விஸ்ட்டு

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி செய்யப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் திடீரென்று புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது போலீஸ் தரப்பையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

சென்னை மயிலாப்பூரில் கடந்த 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் இருவர் பணத்துடன் சென்றுள்ளனர். இதையறிந்த மர்ம நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் எதிர்பாராத நேரத்தில் பைக்கில் வந்தவர்களைத் தாக்கிய மர்ம நபர்கள், அவர்களிடமிருந்து பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அது தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான பணம் என்பதும், பறிபோனது ரூ.2 லட்சம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அக்கம் பக்கத்தில் விசாரித்ததுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், இருவர் பண பையுடன் இருசக்கர வாகனத்தில் செல்வதும், பின் தொடர்ந்து 3 வாகனங்களில் 6 பேர் செல்வதும் பதிவாகியுள்ளது.  இதையடுத்து, சிசிடிவி காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். ஆனால், காவல்துறைக்கே ட்விஸ்ட் கொடுக்கும்படி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து வந்த நபர்கள், பணம் காணாமல் போனது குறித்த புகாரை வாபஸ் பெற்றுச் சென்றுள்ளனர். சிசிடிவியில் துரத்தும் காட்சி சிக்கியுள்ளது. ஆனால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து காவல்துறை இதில் என்ன உள்குத்து இருக்குமோ என விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow