போக்சோ வழக்கில் தப்பியவருக்கு அரிவாள் வெட்டு..! போட்டுத் தள்ளிய மர்ம கும்பலுக்கு வலை..!

Feb 29, 2024 - 02:53
Feb 29, 2024 - 03:00
போக்சோ வழக்கில் தப்பியவருக்கு அரிவாள் வெட்டு..! போட்டுத் தள்ளிய மர்ம கும்பலுக்கு வலை..!

தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பக்கபட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் முருகன் (28). சில ஆண்டுகளுக்கு முன் அவர் 17 வயதேயான தமிழ்ச்செல்வி என்ற சிறுமியை திருமணம் செய்தார். இதை எதிர்த்துத் தமிழ்ச்செல்வியின் தந்தை மந்திரமூர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வடிவேல் முருகனுக்கு குழந்தையும் பிறந்து ஒன்றரை வயது ஆன நிலையில், மந்திரமூர்த்தி வழக்கை முடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வடிவேல் முருகன் ஆஜரானார். அதன் பின் நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய அவரை, தெய்வசெயல்புரம் அருகே மர்ம நபர்கள் சாலையில் வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வடிவேல் முருகன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கொலை வழக்குகள் அவர் மீது உள்ள நிலையில் அதற்குப் பழிக்குப்பழி வாங்கவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow