மதிக்காத மனைவி, மகன்கள்.. விரக்தியில் வீட்டிற்கு தீ வைத்த முதியவர்.. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய முதியவர், மனைவியுடன் சேர்ந்து உயிரிழந்துள்ளார். தீ காயமடைந்த மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Apr 13, 2024 - 08:57
மதிக்காத மனைவி, மகன்கள்.. விரக்தியில் வீட்டிற்கு தீ வைத்த முதியவர்.. 

காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 2வது வீதியில் வசிப்பவர் தங்கராஜ் (60). இவருக்கு லதா (55) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.  
மூத்த மகன் நவீன்குமார் (30) சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில்  கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இரண்டாவது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனைவி லதா மற்றும் மகன்கள் தந்தை தங்கராஜை சரியாக மதிப்பது கிடையாது என்றும் அவருக்கு உணவு கூட கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்ததில் இருந்த தங்கராஜ் இன்று (ஏப்ரல் 13) அதிகாலை வீடு முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளார்.

இதனால் வீடு முழுவதற்கும் மளமளவென தீ பரவியது. இதில் தங்கராஜும், அவரது மனைவி லதாவும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டில் தீ பரவியதை கண்ட நவீன் குமார் தனது மனைவி செல்வி மற்றும் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளார். தொடர்ந்து தாயை காப்பாற்ற மீண்டும் வீட்டிற்குள் சென்ற நிலையில் அவருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த தங்கராஜ் மற்றும் லதாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயத்துடன் இருந்த நவீனை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மேல் சிகச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக  கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow